Total Pageviews

Thursday, March 23, 2017

செவிகள் கிழியட்டும்....
செவிடர்கள் கேட்கட்டும் 

1928…
தொழிற்சங்க இயக்கம் இந்திய தேசத்தில்
வேரூன்றிக் கொண்டிருந்த காலம்
வட மாநிலங்களில் பரவலாக
தொழிலாளர் வேலை நிறுத்தங்கள்
போர்க்குணத்தோடு நடைபெறலாயின.
வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தின்
வளர்ச்சியை  ஒடுக்கும் முகமாக
தொழிற்தகராறு மசோதாவை
டெல்லி மத்திய சபையில் நிறைவேற்றிட
ஆங்கில அரசு முடிவு செய்தது
புரட்சிகர இளைஞர்கள் கூடினார்கள்..
வெள்ளைத்தோல் அரசின்..
தொழிலாளர் விரோத மசோதாவை
எதிர்த்துப் போரிட முனைந்தார்கள்
தொழிற் தகராறு மசோதா
நிறைவேற்றப்படும் நாளன்று
டெல்லி மத்திய சபையில்
உயிருக்கு சேதமின்றி
வெடிகுண்டு வீசுவது என்றும்
தானாகவே கைதை ஏற்றுக் கொண்டு
நீதிமன்றத்தில் வழக்காடுவது என்றும்.
இதன் மூலம் தேசத்தின்
கவனத்தை ஈர்ப்பது என்றும்
ஆங்கில அரசின் அடக்குமுறைகளை  
அம்பலப்படுத்துவது என்றும்...  
புரட்சிகரத் திட்டத்தை..
பகத்சிங் மத்தியக் குழுவில் முன்வைத்தார்.
இவற்றை செய்து முடித்த பின்னால்..
வெள்ளையர்களிடம் சிறைபட்டால்..
தூக்கு மேடை செல்லவும்
தயாராக இருக்க வேண்டும் என்றார் பகத்சிங்..
அவர் முன் வைத்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 
திட்டமிட்டபடி… 1929
ஏப்ரல் 8ஆம் தேதியன்று
எதிர்பார்த்தபடியே  நாடாளுமன்றத்தில்
வைஸ்ராயின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி
தொழிற்தகராறு மசோதா  நிறைவேறியதை
அறிவிக்க ஜெனரல் சூஸ்டர் எழுந்தார்.
பார்வையாளர் அரங்கிலிருந்த
பகத்சிங்கும்…  பி.கே.தத்தும்
பரபரப்புடன் இயங்கினார்கள்
வெடிகுண்டுகளை.. கையிலெடுத்தார்கள்
வெள்ளைக்காரக் காலிகளின் மீது வீசாமல்
காலி  இருக்கைகளின் மீது வீசினார்கள்
வெடிகுண்டு முழங்கட்டும்….
செவிடர்கள் கேட்கட்டும் என்ற
சிவப்புத் துண்டறிக்கைகளை
சினத்துடன் வீசியெறிந்தார்கள்
புரட்சி நீடுழி வாழ்க
ஏகாதிபத்தியம் ஒழிக
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என
உணர்ச்சி பொங்க முழக்கங்களை
உத்வேகத்தோடு எழுப்பினார்கள்
நெருப்பாய் நின்ற அவர்களை
நெருங்கிடத்தயங்கியது
வெள்ளைக்காவல்துறை
பாஞ்சாலச்சிங்கம்
வெள்ளை எலிகளை நோக்கி
வீரமுடன் நடந்து வந்தது
எங்களை நீங்கள் கைது செய்யலாம்
எங்களிடம் ஆயுதங்கள் ஏதுமில்லை
பயமின்றி நீங்கள் எங்களை நெருங்கலாம்என
பகத்சிங் பகன்ற பின்னர்தான்
பதுங்கிப் பதுங்கி
பாஞ்சால வீரனைத் தொட்டுப்பார்த்தது
பரங்கியர் படை 
1929 ஜீன் 6ஆம் தேதியன்று
வழக்கு விசாரணை ஆரம்பமானது
வெடிகுண்டு வீசியதை
வீரமாய் ஏற்றுக்கொண்டனர்  தோழர்கள்
மாவீரன் பகத்சிங்கும் பி.கே.தத்தும்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை
வரலாற்றுப் புகழ் பெற்றதாகும்..
எங்களது  நோக்கம்
நாசத்தை விளைவிப்பதல்ல
தேசத்தை  விடுதலை செய்வது
எங்களது  நோக்கம்
உயிர்ப் பலியல்ல
உணர்வைத் தட்டியெழுப்புவது
எங்களது  நோக்கம்
ஆள்வோரை அழித்தொழிப்பதல்ல...
தொழிலாளரை உயிர்த்தெழுப்புவது...
எங்களது  நோக்கம்..
செவிப்பறையைக் கிழிப்பதல்ல..
செவிடர்களைக் கேட்கச் செய்வது
எங்களது  நோக்கம்
பரங்கியரைப் பரலோகம் அனுப்புவது அல்ல
பரங்கியரை பாரதத்தை விட்டு
பரதேசம் அனுப்புவது...
இறுதியாகச் சொன்னார்கள்
இந்திய தேசத்தில்
எண்ணற்ற இளைஞர்கள்
எங்களைப்போன்றே
எண்ணம் கொண்டவர்கள்
ஏராளாமாய் எழுந்து விட்டனர்...

இந்தியப்பெருங்கடல் போலே
இந்திய இளைஞர்களும்
அமைதியானவர்கள்ஆழமானவர்கள்
அந்த அமைதிக்கடலிலிருந்து
இதோ ஒரு மாபெரும் சூறாவளி
இளைஞர்களின் எழுச்சிமிகு
சூறாவளி எழுந்துள்ளது
அந்த எழுச்சிமிக்கச் சூறாவளி
அகிம்சை என்னும்
கற்பனாவாதத்தின்  கதைமுடிவை
காலம் முடிந்து விட்டதை
துளியும் சந்தேகத்திற்கிடமின்றி
இந்திய மக்களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டது
இந்திய தேசத்து இளைய தலைமுறை
ஏற்றுக் கொண்டு விட்டதை
நாங்கள் அடையாளப்படுத்த மட்டுமே செய்துள்ளோம்.
இன்குலாப் ஜிந்தபாத்
என்று எழுச்சியுடன் முழக்கமிட்டார்கள்…
மானுட விடுதலை
தேசத்தின் விடுதலை
தொழிலாளர் விடுதலைஎன்ற
பொதுவுடைமைச் சிந்தனைகொண்ட
மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தில்..
அவனைப் போற்றிப் புகழ்வதில்
NFTE பேரியக்கமும்
NFTCL வளர்சீர் இயக்கமும்
பெருமை கொள்கின்றன…
பேருவகை கொள்கின்றன…
மார்ச் – 23
சங்கம் வளர்த்த மதுரையில்
சரித்திர நாயகனின் புகழ்பாட..
சங்கமிப்பீர் தோழர்களே
நெற்றிக்கண் திறந்தாலும்
குற்றம் உரைத்த
கூடல் நகரிலே

கூடிடுவீர் தோழர்களே

No comments:

Post a Comment